உச்ச நீதிமன்ற உத்தரவின்படி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குற்ற தடுப்புச் சட்டத்தை அமல்படுத்த அனைத்து உயர் நீதிமன்றமும் முன்வந்து தாமாக வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதேபோன்று, பாடம் நாராயணன் தொடர்ந்த வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, சமூக பாதுகாப்புத்துறை ஆணையர், சமூக நலத்துறை செயலாளர் தாக்கல் செய்த அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், எதிர்காலத்தில் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க தவறினால் அதிகாரிகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர்.
மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழ்நாடு அரசால் ஏடிஜிபி தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புப் பிரிவு, குற்றவாளிகளின் மீது தற்போது வரை எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தை வழக்கில் இணைத்த நீதிபதிகள், சென்னை, வேலூர், சேலம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா? என நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.