தென்னக ரயில்வே பணியிடங்களில் அதிகளவில் வட மாநிலத்தவர்களே தேர்வு செய்யப்படுவதாகவும், இதில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அண்மையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியை நிர்ந்தரமாக்கவும், தென்னக ரயில்வேயில் அதிகளவில் தமிழர்களை பணியில் சேர்க்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே தேர்வு வாரியம், நாடு முழுவதும் உள்ள பணியிடங்களுக்கு தேவையான தொழில்நுட்பப் பிரிவு மற்றும் தொழில்நுட்பம் சாராத மேற்பார்வையிடும் குரூப் சி பிரிவுகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்காக சென்னை, பெங்களூரூ, மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட 21 ரயில்வே தேர்வு வாரியங்கள் உள்ளன. நாடு முழுவதுமுள்ள காலிப் பணியிடங்களுக்கு பொதுவான வகையில் ரயில்வே தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தேர்வாளர் தங்களுக்கு விருப்பமுள்ள ரயில்வே வாரியத்தை தேர்வு செய்து அதற்குரிய பணியிடங்களுக்கு போட்டியிடலாம். இதில், குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கென்று தனியாக இட ஒதுக்கீடு கிடையாது. யாராக இருந்தாலும், எந்த மாநிலத்தையும் தேர்வு செய்யலாம்.
கடந்த சில ஆண்டுகளில் சுமார் 2.2 லட்சம் தமிழர்கள் பெங்களூரு ரயில்வே தேர்வு வாரியத்தை தேர்வு செய்துள்ளனர். உதாரணத்துக்கு ஒருவர் சென்னை ரயில்வே தேர்வு வாரியத்தை தேர்வு செய்தால் அவர் சென்னை, திருச்சி, சேலம், தென்னக ரயில்வே தலைமையகம் மற்றும் ஐசிஃஎப் ஆகிய இடங்களில் மட்டுமே பணியமர்த்தப்படுவார்.
2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விடுக்கப்பட்ட அழைப்பில், துணை லோக்கோ பைலட்- ரயில் ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு பணியிடங்களுக்கு தென்னக ரயில்வேயில் விண்ணப்பத்தில் 51 விழுக்காடு பேர் தமிழர்கள்.
மொத்தமாக 3ஆயிரத்து 218 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 17 விழுக்காடு பேர். தொழில்நுட்ப பரிவு பணிகளுக்கு விண்ணப்பத்தவர்களில் பெரும்பலானவர்கள் டிப்ளமோ அல்லது பொறியியல் படித்தவர்கள் என்பதால் அவர்கள் அந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இந்தப் பணிக்கு குறிப்பிட்ட துறையில் தேர்ச்சி பெற்ற ஐடிஐ விண்ணப்பதாரர்களே தேர்வு செய்யப்படுவார்கள்.
இதனால், குறைவான அளவு தமிழர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் துணை லோக்கோ பைலட் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 53 விழுக்காடு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்" என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் நாளை தீர்ப்பு