சென்னை: திமுக அரசு பொறுப்பேற்ற உடன் பத்திரிகையாளர்களும் முன்களப்பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்று முதல் அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து கரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது.
அதேபோல் கரோனா பெருந்தொற்று காலத்தில் களத்தில் நின்று பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. அந்த வரிசையில் பழிவாங்கும் நோக்கத்தோடும் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் வகையிலும் பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என்று அரசு அறிவித்தது.
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், இன்று (ஜூலை. 29) பத்திரிகை துறையினர் மீது போடப்பட்ட 90 வழக்குகளை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், "முதலமைச்சரின் இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையிலும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீது தற்போது நடைபெற்றுவரும் பல்வேறு தாக்குலுக்கு மத்தியில், தமிழ்நாடு அரசின் இந்த நம்பிக்கையளிக்கும் நடவடிக்கை பத்திரிகையாளர்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும்.
பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பத்திரிகை துறையினர் மீதான வழக்குகள் ரத்து