சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் முதன்முறையாக போயிங் விமான நிறுவனத்திற்கு முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்க, சேலத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்க்கான ஒப்பந்த உத்தரவை போயிங் இந்தியா நிறுவனத்தின் விநியோக மேலாண்மை இயக்குநர் அஸ்வனி பார்கவா வழங்க, ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்-ன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர். சுந்தரம் பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளரை சந்தித்த ஏரோஸ்பேஸ் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரம், கடந்த 33 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து தரும் தொழிலை செய்து வருகிறோம். அமெரிக்க நிறுவனமான போயிங் நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறோம். அவர்களுக்கு துணை நிறுவனமாக நாங்கள் செயல்பட்டு வந்தோம். தற்போது நேரடி ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
சேலம் மற்றும் ஓசூரில் இதற்கான உற்பத்தியை தொடங்க இருக்கிறோம். போயிங் விமான நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து வழங்கவுள்ளோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்பட்டு 2022ஆம் ஆண்டு முதல் அவர்களுக்கு தேவையான உதிரி பாகங்களை வழங்கவுள்ளோம்.
தற்போது 400 பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், சேலம் மற்றும் ஓசூரில் இதற்கான விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. பிறகு ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் இரண்டு ஆண்டுகளில் ரூ. 150 கோடி இதில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
Made in Tamil nadu ... made for the globe என்ற அடிப்படையில் முதலமைச்சரின் அறிவிப்புக்கு இணங்க உற்பத்தியை துவங்க உள்ளோம். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உதிரி பாகங்களை நாங்கள் தயார் செய்து, போயிங் விமானத்திற்கு தேவையான உதிரி பாகங்களை வழங்க உள்ளோம். இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'சேகர் ரெட்டி டைரியில் என் பெயர் எனும் தகவல் தவறு' - அமைச்சர் செந்தில் பாலாஜி