சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியில் அடங்கிய உதவிப்பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளில் 161 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி காலை மற்றும் மாலையில் நடத்தப்பட உள்ளது.
தலைமைச்செயலகத்தில் உதவிப்பிரிவு அலுவலர் பணியில் 74 பணியிடங்களும், நிதித்துறையில் உதவிப்பிரிவு அலுவலர் பணியில் 29 பேரும், உதவியாளர் பணியில் 49 பேரும், நிதித்துறையில் உதவியாளர் பணியில் 9 பேரும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்தப்பணியில் சேர்வதற்கு தகுதியானவர்கள் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தில் திருத்தங்களை செப்டம்பர் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி இரவு 11.59 மணி வரையில் செய்யலாம். நியமன அலுவலரிடம் இருந்து பெறப்படும் சான்றிதழ் மற்றும் தடையின்மை சான்றிதழை டிசம்பர் 6ஆம் தேதி வரையில் பதிவேற்றம் செய்யலாம்.
மேலும் விண்ணப்பதாரர்கள் நியமன அலுவலரிடம் பெறப்பட்ட சான்றிதழின் நகலையும் இணைக்க வேண்டும். விண்ணப்பதார்கள் ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சுப் பணி அல்லது தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பதவியில் தனியே அல்லது இரண்டு பதவிகளிலும் சேர்த்து 5 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகள் பணிகாலம் முடித்து, தகுதிகான பருவமும் முடித்தவராக இருந்தல் வேண்டும்.
இந்த நியமனத்திற்கான விண்ணப்பத்தைப் பரிசீலிக்க நியமன அலுவலருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற பரிந்துரையுடன், தடையின்மைச் சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்’’ என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசில் சுருக்கெழுத்தாளர் சி மற்றும் டி நிலைத் தேர்வு