ஜார்க்கண்ட் மாநிலத்தில் கல்வி அமைச்சராக ஜகர்நாத் மாத்தோ இருந்து வருகிறார். இவருக்கு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் கரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் இருந்துள்ளன. அதைத் தொடர்ந்து அக்டோபர் 1ஆம் தேதி அவரை பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், அவரை சென்னையில் எம்ஜிஎம் தனியார் மருத்துவமனைக்கு அக்டோபர் 19ஆம் தேதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்டார். இங்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மாத்தோவின் உடல்நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை சிறப்பு நிபுணர் சுரேஷ் ராவ் கூறும்போது, "ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் கடந்த மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததுடன் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து எம்ஜிஎம் மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளித்து வருகிறோம். அதன் பின்னர் உடல் நலத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. செயற்கை சுவாசம் மற்றும் எக்மோர் உதவியுடன் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். அங்கிருந்து அழைத்து வந்த பின்னர், இங்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா காலம் என்றாலும் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் - மருத்துவர்கள் அறிவுறுத்தல்