ஜார்க்கண்ட் மாநில கல்வி துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் ஜகர்நாத் மாத்தோ. 54 வயதான இவர் மக்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய ரத்த குழாய் நோய் போன்ற நோய்களும் இருந்தன.
ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக கடந்த அக்டோபர் மாதம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்டார். கடந்த நவம்பர் 10ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அமைச்சருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், ’கரோனாவால் பாதிக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநில கல்வித் துறை அமைச்சர் ஜகர்நாத் மாத்தோவிற்கு நுரையீரல் முற்றிலும் பாதிப்படைந்திருந்தது. தொடர்ந்து அவருக்கு ரெமிடிசிவர், ஸ்டீராய்டு மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டன. இருப்பினும் அவர் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. அவருடைய ஆக்ஸிஜன் அளவும் குறைந்தது.
தொடர்ந்து ராஞ்சி சென்ற எம்ஜிஎம் மருத்துவ குழுவினர் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சையளித்தனர். அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனையில் நுரையீரலில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது.
எக்மோ கருவி பொருத்தப்பட்டு 23 நாட்கள் கழித்து நவம்பர் 10ஆம் தேதி அவருக்கு இரண்டு நுரையீரலும் மாற்று அறுவை சிகிச்சை செய்ய பெற்றது. மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவருக்கு நுரையீரலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 8ஆம் தேதி அவருக்கு பொருத்தப்பட்டிருந்த எக்மோ கருவி அகற்றப்பட்டது. ஜனவரி 1ஆம் தேதி டிரக்கியாஸ்டமி கருவி அகற்றப்பட்டது. தற்போது பூரண குணமடைந்த அமைச்சரை, முதலமைச்சர் நேரில் வந்து அழைத்துச் செல்லவுள்ளார்’ என தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஓபிஎஸ்ஸுடன் விழாக்களில் பங்கெடுத்த கலெக்டருக்கு கரோனா