சென்னை சேத்துபட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான ஜே.சி.டி பிரபாகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முறையாக அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு பெரும் தலைவர்கள். கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், மாதவரம் மூர்த்தி எழுந்து நின்றவுடன் எடப்பாடி பழனிசாமி, அவரிடம் மைக் கொடுங்கள் என்று கூறினார்.
அதன்பின் மாதவரம் மூர்த்தி ஒற்றைத்தலைமை பற்றி பேசிய போது, எடப்பாடி பழனிசாமி அவரைத் தடுத்திருக்க வேண்டும். மாறாக வேறு யாராவது பேச வேண்டுமா என்று கேட்டார். அது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்னை அப்போதே அனுமதித்து இருந்தால், ஆரம்பத்திலேயே ஒற்றைத்தலைமைக்கு ஒரு முடிவு வந்திருக்கலாம்.
தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சிலர் தான் இந்த பிரச்னைக்குக் காரணமாக உள்ளனர். நாங்கள் இருவரும் கட்சியை நன்றாக வழி நடத்தி வருகிறோம் என்று சேலத்தில் கடந்த 9ஆம் தேதி கூறினார். கட்சி அடிப்படை உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கம் தான் உள்ளனர். பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வத்தை திட்டமிட்டு அவமானப்படுத்தினார்கள். ஓ. பன்னீர்செல்வம் மீது பாட்டில்களை வீசியது மட்டும் இல்லாமல் தகாத வார்த்தைகளைப் பேசினார்கள்.
எடப்பாடி பழனிசாமி ஏன் அவர்கள் யாரையும் கண்டிக்கவில்லை. எங்களை பொதுக்குழுவில் கண்ணியமாக நடத்தினார்களா என்று நாடே பார்த்தது. தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராக நியமனம் செய்து இருப்பது எடப்பாடி பழனிசாமி மட்டுமே. முன்கூட்டியே யாருக்கும் இந்த அறிவிப்பை வெளியிடவில்லை. அது பற்றி விவாதிக்கவும் இல்லை. அதிமுக ஓ.பன்னீர்செல்வம் கட்சியோ அல்லது எடப்பாடி கட்சியோ அல்ல. அது தொண்டர்களின் கட்சி.
ஓ.பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்துவது நியாயமா?. பொதுக்குழுவில் வாசிக்காத தீர்மானத்தை வாசித்து காண்பித்த அவர் திமுகவை எதிர்த்து போடப்பட்ட தீர்மானத்தைக் கூட இவர்கள் ரத்து செய்துள்ளனர். இதையெல்லாம் படித்திருந்தால், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள். அன்று காலை நீதிபதிகள் கூறிய 23 தீர்மானங்கள், சட்டச்சிக்கலை ஏற்படுத்துகிறதோ, அதை மட்டும் ரத்து செய்துவிட்டு, திமுகவிற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கலாம்.
ஒற்றைத் தலைமை மற்றும் இரட்டைத்தலைமையை நீக்க முடியாது. இரட்டை இலையை முடக்கும் எண்ணம் ஓபிஎஸ்க்கு இல்லை. தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கமும், நிர்வாகிகள் பழனிசாமி பக்கமும் உள்ளனர். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் நடத்தப்பட்டது போல கிராமங்களில் பெட்டியில் வைத்து பொதுக்குழு தலைவர் மற்றும் அனைத்து பதவிகளையும் தேர்வு செய்ய இவர்கள் தயாராக உள்ளனரா?.
மக்கள் மற்றும் தொண்டர்கள் பன்னீர்செல்வத்தின் பக்கம் உள்ளனர். நிச்சயமாக நீதி வெற்றி பெறும். தற்போது ஓ.பன்னீர் செல்வம் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்.
சசிகலா அவர்களின் பாதையில் பயணிக்கிறார்கள். நாங்கள் எங்கள் பாதையில் பயணிக்கிறோம். இரண்டையும் இணைத்துப்பேச வேண்டாம். சட்டப்படி முறையாக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தால் எங்கள் வல்லுநர் குழுவினரோடு கலந்தாலோசித்து பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கு பெறுவார்" என்றார்.
இதையும் படிங்க: 'அதிமுகவின் பொதுக்குழு சர்ச்சை முதல் திமுகவின் வாரிசு அரசியல் வரை...' - சி.வி. சண்முகம் அதிரடி