விஜிபி உலக தமிழ்ச்சங்கம் சார்பில் அதன் தலைவர் விஜிபி சந்தோஷ் தலைமையில் தைவான் நாட்டிற்கு திருவள்ளுவர் சிலையை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி அடையாறு எம்ஜிஆர் ஜானதி கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தை ஸ்டாலின் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகிறார். அவருக்கு இந்த ஆட்சியைக் கவிழ்த்து முதலமைச்சர் ஆகி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியவில்லையே என்ற வயிற்றெரிச்சலில் விமர்சனம் செய்கிறார். இவ்வாறு விமர்சனம் செய்வது அவருடைய பக்குவமின்மையை காட்டுகிறது. முதலமைச்சர் முதலீடு பெற்றுவந்தால் ஸ்டாலின் பாராட்டுவிழா நடத்துவேன் என்று கூறியிருக்கிறார். அது நடக்கத்தான் போகிறது. அதற்கு நாங்கள் எல்லாம் போகத்தான் போகிறோம்.
ஸ்டாலின் இப்போது சொன்ன கருத்திலிருந்து பின்வாங்கக்கூடாது. மேலும், பொருளதார மந்த நிலைக்கு ஜி.எஸ்.டி மட்டுமே காரணம் என்று கூறுவது தவறானது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக தான் இந்தியாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.