வேதா இல்லம் உருவானது எப்படி?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவருடைய 'வேதா நிலையம்' வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது என்று தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டது. நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்றுவந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவினர் வேதா நிலையத்தில் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வசதியாக என்னென்ன ஏற்பாடுகளைச் செய்யலாம் என்பது குறித்து மூன்று கட்டங்களாக ஆய்வுமேற்கொண்டனர்.
மக்கள் பார்வையிட அனுமதி மறுப்பு
பின்னர் குழுவினரின் பரிந்துரைப்படி, ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணியை பொதுப்பணித் துறை மேற்கொண்டது. தற்போது அந்தப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று வேதா நினைவு இல்லம் திறக்கப்படுகிறது. இதற்கு நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முக்கியமாக பொதுமக்களைப் பார்வையிட அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
ரிப்பன் வெட்டி திறந்துவைப்பு
இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி வேதா இல்லத்தை திறந்துவைத்தார். மேலும் அங்குள்ள ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஜெயலலிதா வாழ்ந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தனர்.
வேதா இல்லத்தின் அம்சங்கள்
வேதா நிலையம் 10 கிரவுண்டு (24 ஆயிரம் சதுர அடி) பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ள வீடு ஆகும். அங்கு நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருள்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் எட்டாயிரத்து 376 புத்தகங்கள், 394 நினைவுப்பொருள்களும் அடங்கும்.
இங்கு நான்கு கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகள், 601 கிலோ 424 கிராம் எடையுள்ள 867 வெள்ளிப் பொருள்கள், வெள்ளிப் பாத்திரங்கள் உள்ளன.
சினிமா, அரசியல் என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் வகையிலான பிளாக் அண்ட் ஒயிட் அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருள்கள், ஜெயலலிதாவின் ஆளுமையைப் பிரதிபலிக்கும் பொருள்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவுப்பொருள்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருள்கள் நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் தயார்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய திறப்பு விழாவில் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் க. சண்முகம், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், எம்எல்ஏக்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், "ஜெயலலிதாவின் சிலை, நினைவிடம், இல்லம் இவையெல்லாம் சரித்திர வரலாறு" என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், "நாங்கள் கும்பிட்ட குலதெய்வத்தை ஆலயத்தில் வந்து பார்ப்பதைப் போன்று உணர்கிறோம். நேற்று ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டது. இன்று அவர் வாழ்ந்த இடம் திறக்கப்பட்டுள்ளது. இது தொண்டர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும்" என்றார்.
சசிகலா விடுதலை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ஏற்கனவே இது குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிவித்திருக்கிறார்கள். ஒருங்கிணைப்பாளர்களின் கருத்துதான் தொண்டர்கள் கருத்து என்றார்.
மேலும் பேசிய செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, "ஜெயலலிதாவின் இல்லம் திறக்கப்பட்டது அதிமுக தொண்டர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வேத இல்லத்தைப் பார்வையிட அனுமதியில்லை என்பது சற்று வருத்தத்தை அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.