சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழ்நாடு அரசின் நடைமுறைகளை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். சேஷசாயி கடந்த நவம்பர் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தின் சாவியை அவரது அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக்கிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் ஒப்படைத்தார்.
சாவியை ஒப்படைத்து நிலையில் வேதா நிலையத்திற்கு வருகைதந்த தீபா, தீபக், அரசு அலுவலர்கள் முன்னிலையில் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தைத் திறந்தனர்.
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய தீபா, "மிகப்பெரிய சட்டப் போராட்டத்திற்குப் பின் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அதிமுக கட்சி பெரிய கட்சி, பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதைக் காட்டிலும் பெரிய விஷயங்களை அதிமுக செய்ய வேண்டியுள்ளது. அதிமுக உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தால், அதற்கும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.
தீர்ப்பின் முழு விவரங்கள்
ஏற்கனவே 80 கோடி ரூபாய் செலவில் மெரினா கடற்கரையில் ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற அதைக் கையகப்படுத்துவதில் எந்தப் பொதுப் பயன்பாடு சம்பந்தப்பட்டுள்ளதாகக் கருத முடியாது.
எகிப்தில் பராஹாஸ் ஆட்சியாளர்கள் பிரமிடுகளை அமைத்தனர். முகலாய பேரரசர் ஷாஜகான் தாஜ்மஹால் எழுப்பினார். ஆனால் தற்போது இந்தியா எகிப்து ஆட்சியாளர்களிடமோ, முகலாய பேரரசர்கள் வசமோ இல்லை. இந்தியா, மக்களுக்குச் சொந்தமானது.
ஒரு சொத்தை கையகப்படுத்தும் முன் சம்பந்தப்பட்டவர்களுக்கு, 60 நாள்களுக்கு முன் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை. வேதா நிலையத்திற்கு யாரும் உரிமைதாரர்களே இல்லை என்ற ரீதியில் அரசு தானே அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.
தங்கள் கட்சி சார்ந்த தலைவரை கௌரவிப்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் இந்த வழக்கில் அரசியல் தலைமையையும், சொத்தின் உரிமையையும் பிரித்துப் பார்க்க தவறிவிட்டார்கள். உரிய விதிகளைப் பின்பற்றாமல், கையகப்படுத்தப்பட்டுள்ளது.
வேதா இல்லத்தை அரசுடமையாக்க நிலம் கையகப்படுத்திய அறிவிப்பு, அரசாணை ரத்துசெய்யப்படுகிறது. உத்தரவு நகல் கிடைத்த மூன்று வாரங்களில் போயஸ் தோட்ட இல்லத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய 67 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரத்து 33 ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அரசு திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: தேசியவாதிகளை கைதுசெய்யும் அறிவாலய அரசு - அண்ணாமலை கடும் கண்டனம்