சென்னை: கடந்த 1996ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. பின் ஜெயலலிதா மறைந்த நிலையில் மற்ற மூவரின் தண்டனை காலம் நிறைவு பெற்று விட்டது.
இந்த வழக்கில் தங்கம், வைரம் உள்பட விலை மதிப்பு மிக்க பொருட்கள் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து 1996ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டது. 26 ஆண்டுகளாக இந்த பொருட்கள் அனைத்தும் பெங்களூரு நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலரான நரசிங்க மூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்ற உத்தரபடி பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட கர்நாடக அரசு சார்பில் கிரண் எஸ்.ஜவாலியா என்பவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஏலம் விடுவதற்கான நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்டதாக பட்டியிலிடப்பட்ட பல பொருட்கள் நீதிமன்ற கருவூலத்தில் இல்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்ட விடமால் தடுக்கும் கும்பல்.. கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் வேதனை!
இது தொடர்பாக நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, 30 கிலோ எடை உள்ள தங்கம், வைரம், மரகதம், ரூபி, முத்துகள் போன்ற ஆபரணங்கள் மட்டுமே இருப்பதாகவும், மீதமுள்ள 28 வகையிலான விலை உயர்ந்த பொருட்கள் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வழக்கின் மனுதாரரான பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி, வழக்கை விசாரித்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்ற ஆவணங்களை இணைத்து ஆர்டிஐ மூலம் கடிதம் எழுதினார். அதில், 11 ஆயிரத்து 344 புடவைகளும், 250 சால்வைகள், 750 ஜோடி காலணிகள், விலையுயர்ந்த கடிகாரங்கள், பரிசுப் பொருட்கள் என 28 வகையிலான ஆயிரக்கணக்கான பொருட்கள் குறித்த தகவல் இல்லை எனவும், பொருட்களின் பட்டியலை இணைத்து அவை லஞ்ச ஒழிப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால் அவற்றை கர்நாடக நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை, ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட எந்த பொருட்களும் தங்களிடம் தற்போது இல்லை எனவும், தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் ஜெயலலிதாவின் நாமினியான பாஸ்கரனிடம் ஒப்படைத்து விட்டதாக தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்து ஆவணங்களில் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களை எவ்வாறு உரியவர்களிடமே திருப்பி ஒப்படைக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் சட்ட ரீதியாக வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் மந்திரவாதி கத்தியால் குத்தி கொலை.. நடந்தது என்ன?