ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், 2021- சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் சிறப்பாக களப்பணி ஆற்றுவது தொடர்பாகவும் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜேசிடி பிரபாகரன், கோகுல இந்திரா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் வழிகாட்டுதல்படி, மாணவச் சமுதாயத்தின் அட்சயப் பாத்திரமாக விளங்கிய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாள் தினத்தை மாணவச் சமுதாயத்தின் எழுச்சி நாளாகக் கொண்டாடுவது என கழக மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மேலும், பிப்ரவரி 24ஆம் தேதி அன்னதானம், ரத்ததானம், மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கான போட்டிகள் முதலானவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கியில் 16.43 லட்ச ரூபாய் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்ததுடன், அதற்கான ஆணை வெளியிட்டதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க:சசிகலாவை சந்திக்க வாய்ப்பில்லை: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திட்டவட்டம்