தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கு 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில், கடலூர் மாவட்டம், குமளங்குளம் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஜெயலட்சுமி என்பவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட விஜயலட்சுமி என்பவரைவிட ஆயிரத்து 34 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
ஆனால், சில மணி நேரங்களில், விஜயலட்சுமி வெற்றிபெற்றதாகத் தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். இதை எதிர்த்து ஜெயலட்சுமியும், தன்னை பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும் என விஜயலட்சுமியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது, சின்னம் ஒதுக்கீடு செய்ததில் குளறுபடி ஏற்பட்டதால் இந்தத் தேர்தலை ரத்துசெய்து மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சின்னம் ஒதுக்கியதில் குளறுபடிகள் ஏற்பட்டதாகத் தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்க முடியாது எனவும், ஆணையத்தின் இந்த நடவடிக்கையை பார்க்கும்போது தேர்தல் நடவடிக்கையில் தலையிடுவதுபோல் உள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து, முதலில் அறிவிக்கப்பட்ட ஜெயலட்சுமி வெற்றிபெற்றதாக ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, தன்னை பதவி ஏற்க அனுமதிக்கக்கோரி விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: எய்ம்ஸ் மருத்துவக் குழுவில் மரு.சுப்பையா சண்முகம் இருப்பது பெண்களை அவமதிக்கும் செயல்'