சென்னை: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று (பிப்.24) கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி சென்னை ராயப்பேட்டையின் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்தநாளும் எழுச்சிமிக்க நாளாக பார்க்கப்படுகிறது. அதிமுகவுக்கு என்றும் அழிவே கிடையாது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா எவ்வாறு கட்சியை வழிநடத்திச் சென்றாரோ, அதேபோல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்து கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறார்.
சிலர் அதிமுகவை தகர்த்திட முடியும் என்ற தவறான எண்ணத்தில் திமுகவின் பி - டீமாக செயல்பட்டு வந்து கொண்டிருந்தனர். எனவேதான் அவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் அதிமுகவின் வெற்றிப் பயணம் யாராலும் தடுக்க முடியாத பயணம். நாங்கள் நியாய தர்மத்துடன் இருந்த காரணத்தினாலேயே கட்சி முழுமையாக எங்கள் பக்கம் வந்திருக்கிறது.
மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. 75 ஆண்டுகள் மட்டும் இல்லாமல், வருகிற 100 ஆண்டு காலங்களுக்கும் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆயிரம் ஆண்டு காலம் கட்சி நிலைத்திருக்கும். ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அதிமுகவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. நாங்கள் அவரை என்றைக்கோ கட்சியில் இருந்து விலக்கி விட்டோம். திமுகவை வேரோடு சாய்ப்பதற்காக அதிமுகவுடன் இணைந்து கூட்டணி கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன” என்றார்.
இதையும் படிங்க: நீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவு இல்லை; விரைவில் பல ரகசிங்கள் வெளியிடப்படும் - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி