சென்னை : அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி அலுவலகச் செயலாளர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 20ம் தேதி அதிர்ச்சியளிக்கும் சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் பணியிடங்களை தினக்கூலிகளாகவோ, தொகுப்பூதியம் அடிப்படையிலோ நிரப்புவதை இனிமேல் மனித வள நிறுவனங்களின் மூலமே செய்து கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் ஒரு தலைமை பல்கலைக்கழகம். எண்ணற்ற மேதைகளை உருவாக்கிய பல்கலைக்கழகம். அதில், பயிலவேண்டும் என்பது லட்சக்கணக்கான மேல்நிலைபள்ளி மாணவர்களின் கனவு. அத்தகைய பல்கலைக்கழகத்தில் இருந்து ஆசிரியப் பணியிடங்களையும் மற்ற பணியிடங்களையும் தினக்கூலி முறையில் நிரப்பவேண்டும்.
அதுவும் வெளி மனித வள நிறுவனங்களின் மூலம் நிரப்ப வேண்டும் எனும் பொறுப்பற்ற சுற்றறிக்கையை யார் தான் எதிர்பார்க்க முடியும்? கல்வி குறித்து ஆளும் திமுக அரசு எத்தகைய கொள்கைகளை கொண்டிருக்கிறது என்பதை இது வெளிப்படுத்தியது. அனைத்து மட்டங்களிலும் இருந்தும் கடும் எதிர்ப்புகளும், அதிருப்தியும் கொந்தளிப்பாக வெளிப்பட்டன.
அடுத்த நாளே கடந்த 21ம் தேதி மறு சுற்றறிக்கையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம். அதில் ஆசிரிய பணியிடங்களை என்ற சொற்களை நீக்கி விட்டது. ஆசிரியர் அல்லாதோர் பணியிடங்கள் தினக்கூலி அல்லது தொகுப்பூதிய அடிப்படையிலோ நிரப்புவதை இனிமேல் மனித வள நிறுவனங்களின் மூலமே செய்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டிருக்கிறது.
ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என்பது அடிப்படையாக ஆய்வக உதவியாளர்கள் (Technical Assistant) பணியினைக் குறிக்கிறது. தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆய்வகப்பணி என்பது ஒரு மிக முக்கிய பணியாகும்.
ஆய்வகத்தில் தான் மாணவர்கள் தாங்கள் தத்துவமாக பயின்றதை மெய்யாக உணர்ந்து கொள்வார்கள். பலவித நுட்பமான கருவிகளை மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் தயாராக வைத்திருக்க வேண்டும். ஒரு ஆய்வகத்தை பல்துறை மாணவர்கள் பயன்படுத்துவார்கள்.
இதையும் படிங்க : அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் குறித்து அண்ணா பல்கலைகழகம் புதிய விளக்கம்!
கருவிகள் பழுதடையும். அதனை பழுது நீக்கம் செய்யவேண்டும். அத்தகைய கருவிகளையும் உபகரணங்களையும் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என ஒவ்வொரு மாணவருக்கும் விளக்க வேண்டும். நாள் இறுதியில் கருவிகள் எல்லாம் திரும்ப வந்துவிட்டனவா என கவனமாக பார்க்க வேண்டும்.
பேராசிரியர்களோடும், மாணவர்களோடும் தோளோடு தோள் நின்று செய்ய வேண்டிய பணி ஆய்வக உதவியாளர்கள் (Technical Assistant) பணி. அதுவும் இறுதியாண்டு மாணவர்கள் ஒவ்வொருவரும் ப்ராஜெக்ட் செய்ய வேண்டும். அந்நேரத்தில் மாணவர்களுக்கு ஆய்வகப் பணியாளர்களின் உதவி என்பது மிகமிக இன்றியமையாதது. பொறியியல் பல்கலைக்கழகங்களின் ஆய்வகத்தில் தான் தேசத்தின் பொறியியற் கட்டுமானத்தின் அடித்தளம் கட்டமைக்கப்படுகிறது.
அத்தகைய பணியாளர்களை தினக்கூலிகளாக அல்லது தொகுப்பூதிய கூலிகளாக நியமனம் செய்வது அறமற்ற செயல். கல்வி மீதும், மாணவர்கள் மீதும் மதிப்பேதும் இருக்குமானால் இத்தகைய சுற்றறிக்கைகளுக்கு சாத்தியமேயில்லை.
ஏற்கனவே தேசியக் கல்விக் கொள்கை 2020 மூலம் மத்திய அரசு கல்விக் கட்டுமானங்கள் மீது கடும் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழக அரசும் இவ்வாறு நடந்துகொள்வது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதை ஒத்திருக்கிறது.
அறத்திற்கும், சமூகநீதிக்கும் புறம்பான இச்சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் ஆகிய அனைத்துப் பணியிடங்களும் முறையான வழிகளில், தகுதியும், திறமையும் உள்ளவர்களைக் கொண்டு, இட ஒதுக்கீட்டை கடைபிடித்து காலமுறை ஊதிய விகிதத்தில் விரைவில் நிரப்பப்பட வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்