சென்னை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகரில் பிங்க் ஆட்டோ திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆட்டோவுக்கு பெண்களே உரிமையாளராகவும், ஓட்டுநராகாவும் இருக்கும் இத்திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டார் வாகனச் சட்டம், 1988 பிரிவு 95 இன் துணைப்பிரிவு(1)ன் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள், 1989 இல் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
விதிகள்:
அதன்படி, சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘பிங்க்’ ஆட்டோ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் விதிகளின்படி, பெண்களுக்கான ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும். பிங்க் ஆட்டோ திட்டத்தில் ஆட்டோவுக்கு பெண்களே உரிமையாளராகவும், ஓட்டுநராகவும் இருத்தல் வேண்டும்.
பிங்க் ஆட்டோ ஓட்டும் பெண்கள் பிங்க் நிற சீருடையில் இருக்க வேண்டும். பிங்க் ஆட்டோக்கள் அனுமதி வழங்கப்பட்ட நாளிலிருந்து குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மாற்றப்படாது. ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் விஎல்டிடி என்று அழைக்கப்படும் வாகன கண்காணிப்பு சாதனம் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் மாதம் இறுதிக்குள் பிங்க் ஆட்டோ பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.