புதுடெல்லி: அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ஆற்றிய உரையில் அரசியல் சட்டத்தின் முகவுரையில் உள்ள சோசலிஸ்ட், மதசார்பற்ற வார்த்தைகள் தவிர்க்கப்பட்டதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
எனவே இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் மக்களவை திமுக தலைவர் டி.ஆர்.பாலு , மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "அரசியலமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அவரது உரை என்பது நமது நாட்டின் மக்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பீடுகளை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட முக்கியமான தனித்தன்மை வாய்ந்த நிகழ்வாகும்.
இதையும் படிங்க: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டு.... பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே உள்ளிட்டோர் வாழ்த்து!
எனவே நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் குடியரசு தலைவரின் உரையின் அம்சத்தை புரிந்து கொள்ள வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட குடியரசு தலைவரின் உரையில் சோசியலிஸ்ட் , மதச்சார்பற்ற என்ற நமது அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்கள் இடம் பெற வில்லை என அறிஞர்கள், பொதுமக்களால் பரவலாகக் குறிப்பிடப்படுகிறது. இது நாடாளுமன்ற நடைமுறையில் சிந்தனைக்கு உரியதாகும். இதனை இந்த தேசத்துக்கு மேலும் தெளிவுபடுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற குடியரசுத் தலைவரின் உரை குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும்.
எனவே, மக்களவை அலுவல் குறிப்பில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் சேர்க்கப்பட வேண்டும் என தங்களிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கின்றேன்,"என்று தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்