செங்கல்பட்டு: ஸ்னாப் சாட் செயலில் கல்லூரி மாணவியுடன் பழகி தனிப்பட்ட புகைப்படங்களை காட்டி மிரட்டிய காவலாளி கைது செய்யப்பட்டார். மாணவியிடம் இளைஞரை போல நடித்து காதல் வலையில் வீழ்த்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த மாதம் அவரது செல்போனில் ஸ்னாப் சாட் (snapchat) என்ற செயலி வாயிலாக தொடர்பு கொண்ட நபர் தான் சென்னையை சேர்ந்த 25 வயது இளைஞர் எனக்கூறி அறிமுகமாகியுள்ளார்.
சமூக வலைதள கணக்கில் இருந்த புகைப்படத்தை கண்ட மாணவியும் அவருடன் தொடர்ந்து பேசி பழகியுள்ளார். தொடர்ந்து தனது புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார். நாளடைவில் அந்த நபர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தனிப்பட்ட புகைப்படங்களையும் கேட்டு பெற்றுள்ளார். பின்னர் அந்த நபரின் பேச்சில் சந்தேகமடைந்த மாணவி வீடியோ காலில் வரும் படி அழைத்துள்ளார். ஆனால் அந்த நபர் அதற்கு மறுத்து வந்துள்ளார். இதனால் குழப்பமடைந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூறி உள்ளார்.
இதையும் படிங்க: சென்னை டூ தஞ்சை... காதலனை தேடி வந்த சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை!
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவி கொடுத்த சமூக வலைதள கணக்கை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார் (38) என்பது தெரியவந்தது. மேலும், இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவும் அதேவேளையில் பகுதி நேர 'பைக் டாக்ஸி' ஓட்டி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து இவரை கைது செய்த போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.