சென்னை: வண்டலூர் காப்புக்காடு மலை அடிவாரத்தில் 3 மான்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வண்டலூர் காப்பு காட்டு அருகே குப்பை கொட்டும் இடத்தில் அருகருகே மூன்று மான்கள் இறந்து கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தாம்பரம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் உடல் அழுகிய நிலையில் மூன்று மான்கள் கிடந்ததை கண்டனர். மான்களை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மான்கள் உயிரிழக்கக் காரணம்: இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடுவிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர்,"மான்களின் உடற்கூராய்வு அறிக்கையின்படி உயிரிழந்த மான்களின் வயிற்றில் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தன. மேலும், வெறும் பிளாஸ்டிக் கழிவுகளை மட்டும் தின்று அவை உயிரிழக்கவில்லை. நாய்கள் கடித்தன் காரணமாக அவை உயிரிழந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.
வண்டலூர் ஊராட்சி நிர்வாகத்திடம் எட்டு மாதங்களுக்கு முன்பே, காப்புக்காடு மலை அடிவாரத்தில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தோம். ஆனால், ஊராட்சி நிர்வாகம் அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த பகுதியில் இரை தேடி வரும் மான்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் காப்புக்காடு மலையை சுற்றி 30க்கும் மேற்பட்ட நாய்கள் உலவுகின்றன. அவை மான்களை துரத்தி கடிக்கும் நிலையும் உள்ளது. எனவே, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை பாதுகாக்க வண்டலூர் மலை அடிவாரத்தை சுற்றி இரும்பு தகடுகளால் ஆன தடுப்புகள் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றோம்,"என்றார்.
அபாயகரமான கழிவுகள்: சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் ஊராட்சியில் சேகரிக்கப்படும் அனைத்து வகையான குப்பைகளையும் வண்டலூரில் உள்ள மலை அடிவாரத்தில் ஊராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது. இதில் உணவு பொருட்களின் கழிவுகள் மட்டுமின்றி மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட அபாயகரமான கழிவுகளும் உள்ளன. இதன் அருகே உள்ள மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 1172 ஏக்கர் பரப்பளவில் காப்புக்காடு உள்ளது. இந்த காப்பு காட்டில் மான்,நரி,ஓநாய், உடும்பு,முயல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன.
மேலும் இது தொடர்பாக வண்டலூர் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, "குப்பைகளை கொட்டி தரம் பிரிக்க போதுமான இட வசதி இல்லை. இடம் ஒதுக்கித் தருமாறு அரசிடம் கேட்டுள்ளோம். அரசு ஒதுக்கும் இடத்தில் குப்பைகளை தரம்பிரித்து பின்னர் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,"என தெரிவித்தனர்.