தூத்துக்குடி: சில நாட்களாக இணையத்தின் ஹாட் டாப்பிக்காக வலம் வந்த தகவல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவியின் பிரிவு குறித்து சமூக வலைதள பதிவுகள். நவம்பர் 19ஆம் தேதி பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தனது வளைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, ஏ.ஆர்.ரகுமானிடம் பணிபுரிந்த இசைக் கலைஞர் மோகினி டே தனது கணவர் மார்ஷ் ஹார்ட்சச்சும்-ஐ பிரிவதாக அறிவித்திருந்தார். இந்த அடுத்தடுத்த பதிவுகள் இணையவாசிகளுக்கு பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தன் மீது அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமானிடம் பணிபுரிந்த இசைக் கலைஞர் மோகினி டே, “ஏ.ஆர்.ரகுமான் எனது தந்தை போன்றவர்” என வீடியோ வெளியிட்ட நிலையில், அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமானின் குடும்ப நண்பரும், சென்னை சேப்பாக்கம் தொகுதி அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ வேட்பாளரும், பாமக துணைத் தலைவருமான கசாலி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவர், “நானும் ரகுமானும் சிறு வயதில் இருந்து நெருங்கிய நண்பர்கள். எனவே நான் ரகுமானின் தனிமனித ஒழுக்கம் குறித்து நன்றாக அறிந்தவன். தற்போது வெளியான ரகுமான் மற்றும் அவரது மனைவியின் பிரிவு குறித்த செய்தி இணையத்தில் பல்வேறு விதமாக திரிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கிணற்றில் தவறிய ஒருவர்; அதை பார்க்கச் சென்ற பெண்ணும் தவறிய சோகம்!
சில யூடியூபர்கள் ரகுமானுடன் இருந்து பார்த்தது போல் சில கதைகளை சித்தரிக்கின்றனர். ஆனால் ரகுமான் அமைதியாக இருந்து அனைவருக்கும் உதவும் மனம் கொண்டவர். சோமாலியா போன்ற நாடுகளுக்கு அதிகளவு உதவி செய்பவர் அவர். உதவியைக் கூட அமைதியாக செய்யும் தன்னடக்கம் கொண்டவர்.
ஏழை மக்களின் இசை கனவுகளை நிறைவேற்றி வருபவர். தனது இசை நிறுவனம் மூலம் பல இளைஞர்களின் இசை கனவை நினைவாக்கியவர். இந்தியாவின் புகழ் மற்றும் தமிழின் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றவர் ரகுமான்.
எனவே அவர் குறித்து அவதூறு பரப்புவது மிகுந்த மனவலியை கொடுக்கிறது. நான் யூடியூபர்களுக்கு சவால் விடுகிறேன். ரகுமான் மீதான அவதூறுக்கு ஆதாரத்தை எடுத்து காட்ட சொல்லுங்கள். அவ்வாறு ஆதாரத்தை அளிப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் தருகிறேன். இசையை நேசிக்கும் அனைவருக்கும் ரகுமான் முன்னுதாரணமாக உள்ளார். அதை சிதைத்து அவரது புகழை உடைக்க நினைக்காதீர்கள். அவர் அப்படியெல்லாம் உடைந்து போகும் ஆள் அல்ல "என்று கசாலி கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரை பூர்வீகமாக கொண்டவர் கசாலி. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது சென்னை சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக - பாமக கூட்டணியில் போட்டியிட்டு 23,930 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்