சென்னையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன் , அன்பரசு, சுரேஷ், தாஸ், ரெங்கராஜன், வெங்கடேசன், தாமோதரன் உள்ளிட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட் பால்ராஜ், அன்பரசு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 100 சதவீதம் வாக்கு அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. அதனைச் செயல்படுத்தும் வகையில் அனைவரும் குடும்பத்தினருடனும், உறவினர்களையும் தேர்தலில் வாக்களிக்க வைப்போம்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் 100 சதவீதம் தபால் வாக்கினை அளிக்கும் வகையில் முன்கூட்டியே தபால் ஓட்டுகளை அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த உள்ளோம். அதிமுகவின் தேர்தல் அறிக்கையின் அனைத்து பக்கங்களையும் படித்துப் பார்த்தோம் . ஆனால் அரசு ஊழியர் ,ஆசிரியர் என்ற வார்த்தை இடம் பெறாத முதல் தேர்தல் அறிக்கையை அதிமுக இந்த முறை வழங்கியிருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
எனவே ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை காயப்படுத்தியவர்கள் யார், களங்கப்படுத்தியவர்கள் யார், ஆதரிப்பவர்கள் யார் என்பது தங்களுக்கு தெரியும். அதற்கேற்ப 100 விழுக்காடு வாக்களிப்போம் என தெரிவித்தனர்.