சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் முதலமைச்சரை மு.க.ஸ்டாலினைச் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மிக்ஜாம் புயல் நிவாரணத்திற்காக முதலமைச்சரின் பொது நிதிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேசியதாவது, "மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினோம். மழை மற்றும் புயல் பாதிப்புகளை முதலமைச்சர் சிறப்பாகக் கையாண்டு உள்ளார்.
இந்தியாவில் வாழும் 25 கோடி முஸ்லிம்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம் என 1989ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்தோம். அதன்படி பாஜகவிற்கு எப்பொழுதும் முஸ்லீம் அமைப்பினர் வாக்களிக்க மாட்டோம். முஸ்லிம் அமைப்பினரின் கூட்டத்திற்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் வருவது குறித்து எந்த வித கருத்தும் கூறுவதற்கு இல்லை.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ராமநாதபுரத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளது. ராமநாதபுரத்தில் தற்போது நவாஸ் கனி எம்பி அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவர் திமுக உட்பட அனைத்து தரப்பு மக்களிடமும் அவரது வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் செயல்களால் நற்பெயர் பெற்றுள்ளார். திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் ஒதுக்குவார்கள் என நம்புகிறோம். மீண்டும் எங்களுக்கே அந்த தொகுதியை ஒதுக்கினால் கூட்டணிக்கும் நல்லது. பாஜக சார்பில் எந்த இடத்தில் எந்த பிரபலங்கள் நின்றாலும் அதனை எதிர்கொள்வோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!