சென்னை: தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா மீது செபி அமைப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து மூன்று கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. மூன்றாண்டுகள் பங்குச்சந்தையில் பங்குபெறுவதற்குத் தடையும் விதிக்கப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றியபோது தேசிய பங்குச்சந்தை தொடர்பான பல்வேறு ரகசிய தகவல்களையும் இமயமலையிலுள்ள சாமியார் ஒருவருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாக செபி அமைப்பு விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையின் நிர்வாகியாக ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை நியமித்த விவகாரத்திலும் அவருக்குச் சம்பளம் உயர்த்தப்பட்ட விவகாரத்திலும் மோசடி செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு சுமத்தியது. சித்ரா ராமகிருஷ்ணா நிர்வாக இயக்குநராக 2016ஆம் ஆண்டு தேசிய பங்குச்சந்தையிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை சாமியார் உத்தரவில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக செபி அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில்தான் வருமான வரித் துறை அலுவலர்கள் சித்ரா ராமகிருஷ்ணா தொடர்பான இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர். குறிப்பாக மும்பையிலும், சென்னையிலும் அவருக்குத் தொடர்பான இடங்களிலும் சோதனை நடத்தினர். சென்னையில் சேலையூர், அண்ணாசாலை ஆகிய இடங்களில் சோதனை நடத்திச் சென்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக தேசிய பங்குச்சந்தை தொடர்பான தகவல்களை சாமியார் ஒருவருக்குப் பகிர்ந்துகொண்டு, அவரின் உத்தரவுக்கிணங்க செயல்பட்டு பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக செபி அமைப்பு குற்றஞ்சாட்டியது.
அதன்மூலம் கணக்கில் வராத வருமானத்தைச் சேர்த்திருப்பதாகவும், வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் நடத்துவதாக வருமான வரித் துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்தச் சோதனையானது மும்பையில் நடைபெற்றுவருவதாகவும் வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெற்ற குழந்தையை விற்ற தாய் - ஒன்பது பேர் கைது!