சென்னை: தமிழ்நாட்டில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக பைனான்சியர்கள், குவாரி அதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் கட்டுமான நிர்வாகிகள் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை, ராணிப்பேட்டை என 28-க்கும் மேற்பட்ட இடங்களில் 250-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், 'கோ, விண்ணைத்தாண்டி வருவாயா' படங்களின் தயாரிப்பாளரும், 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தின் இயக்குநருமான எல்ரெட் குமாருக்கு தொடர்புடைய இடங்களை மையப்படுத்தி வருமான வரித்துறையினர் இன்று(மார்ச்.2) சோதனை நடத்தி வருகின்றனர். எல்ரெட் குமார் கட்டுமானத்தொழில், குவாரி தொழில் என 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இயக்குநராக இருந்து வருகிறார்.
உதவியாளர் வீட்டில் சோதனை
குறிப்பாக சென்னை தியாகராயநகர் ராஜா தெருவில் உள்ள ஈகே இன்ஃப்ரா (EK infra) என்ற கட்டுமான நிறுவனம், பகவானந்தம் தெருவில் உள்ள ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் (RS infotainment) சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக பள்ளிக்கரணை பகுதியில் உள்ள எல்ரெட் குமாரின் உதவியாளர் கந்தசாமி வீட்டிலும், ஆலந்தூரில் உள்ள டி.ஜே மினரல்ஸ் என்ற தாதுமணல் அலுவலகத்திலும், செங்கல்பட்டு எருமையூர் பகுதியில் உள்ள கல்குவாரியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலையில் உள்ள சுப்பையா தெருவில் பைனான்சியர் சுரேஷ் லால்வானி என்பவரின் வீட்டிலும், வேப்பேரி ஜெர்மையா சாலையில் உள்ள எல்ரெட் குமார் மற்றும் மங்கல்சந்த் துகார் இயக்குநராக நடத்தி வரும் கட்டுமான பைனான்ஸ் நிறுவனம் மற்றும் மகாவீர் காலனியில் அதே நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
திமுக பிரமுகர் வீட்டில் சோதனை
ராணிப்பேட்டை ஆற்காடு பகுதியைச் சேர்ந்த குவாரி உரிமையாளரும், திமுக உறுப்பினரான ஏ.வி. சாரதி என்பவருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள், கல்குவாரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை முடிவில்தான் முழு விவரம் தெரியவரும் என அலுவலர்கள் தெரிவித்தனர். வருமான வரித்துறை சோதனையை ஒட்டி பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா: முதலமைச்சர் ஸ்டாலின் பெயரைக்கூறி பொறுப்பேற்பு