இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை அவர் வெளியிட்டுள்ள அவர், அதில், ”மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் ஆளுநர் தொடக்கம் முதலே எதிர்மறையாகதான் செயல்பட்டு வருகிறார். இதே விவகாரத்தில் அவசரச் சட்டம் பிறப்பிக்கும்படி இரு முறை அமைச்சரவை பரிந்துரைத்தும் அதை ஆளுநர் ஏற்கவில்லை. பின்னர் சட்டப்பேரவையில் சட்டமியற்றி அனுப்பிய பிறகு கடந்த 5ஆம் தேதி முதலமைச்சரும் அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்து இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன்பின் 10 நாள்களாகியும் ஆளுநரிடமிருந்து பதில் இல்லை.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால், நடப்பு ஆண்டில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். ஏழு தமிழர் விடுதலை குறித்த பரிந்துரையாக இருந்தாலும், 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டு சட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும் உணர்வுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுவது முறையல்ல.
நீட் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளன. அடுத்த ஓரிரு நாள்களுக்குள் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதற்குள் ஆளுநர் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அதை எளிதாக எடுத்துக் கொண்டு, நடப்பு ஆண்டில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படாது. அடுத்த ஆண்டு முதல் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிக்குமானால் அது சமூகநீதிக்கும் ஏழை மாணவர்களுக்கும் இழைக்கப்படும் துரோகமாக அமைந்து விடும்.
எனவே, எந்தெந்த வகைகளில் எல்லாம் ஆளுநருக்கு அழுத்தம் தர முடியுமோ, அந்தந்த வகைகளில் எல்லாம் அழுத்தம் கொடுத்து 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகு தான் மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளி திறக்க தற்போது வாய்ப்பு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி