சென்னை: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உண்ணி களைச்செடிகளால் தயாரிக்கப்பட்ட யானைகள் நிறுவி விழிப்புணர்வை வனத்துறை அமைச்சர் கா. ராமசந்திரன் தொடங்கி வைத்தார் நிகழச்சியில் பேசிய அவர், “ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உள்ள யானைகளின் வாழ்விடங்களில் தமிழ்நாட்டின் வனப்பகுதிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பண்டைய தமிழ் இலக்கியத்தில் உள்ள யானைகள் பற்றிய குறிப்புகள் தமிழர் வாழ்வியலில் யானைகள் ஒரு அங்கமாக விளங்குகின்றன. யானைகள் பாதுகாப்பை உறுதி செய்ய யானைகளின் வாழ்விட பாதுகாப்பிற்காக இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் நீலகிரி யானைகள் காப்பகம், நிலம்பூர் யானைகள் காப்பகம்,ஸ்ரீவில்லிபுத்தூர் யானைகள் காப்பகம், ஆனைமலை யானைகள் காப்பகம் என 4 யானைகள் காப்பகங்கள் உள்ளன.
கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த யானைகள் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் சுமார் 2,700 யானைகள் உள்ளன. உலக யானைகள் நாளில், தமிழ்நாட்டின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியமலை அறிவிக்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. கானுயிர்ச் சூழலமைப்புகளின் சமநிலையைப் பேணுவதில் யானைகள் மிக முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன.
இயற்கையின் கொடையான இந்த மிடுக்குமிகு பாலூட்டிகளை எவ்விலை கொடுத்தேனும் நாம் பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலக யானைகள் தினத்தில் யானைகளின் நிலை குறித்து அறிந்துகொள்வோம்