சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள வீட்டு வசதித்துறை வாரிய அலுவலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களைச்சந்தித்து உரையாற்றினார்.
அதில், 'கட்டுமானத்துறையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 30 நாட்கள் சோதனை முறையில் ஒற்றைச்சாரள முறையில் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பின்னர் மே மாதம் முதல் ஒற்றைச்சாரள சோதனையில் கண்டறியப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டு மாதத்தில் சிஎம்டிஏ சம்பந்தப்பட்ட சேவைகள் மற்றும் அனுமதிகள் அனைத்தும் ஆன்லைனில் ஒற்றைச்சாரள முறையில் வழங்கப்படும்’ எனவும் கூறினார்.
’மேலும் மக்களின் கால விரயத்தை குறைக்க அனுமதிகள் வழங்குவதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 10 ஏக்கர் வரை லேஅவுட் ஒப்புதல்களை மாவட்ட அலுவலகங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். 5 ஏக்கர் வரை நகராட்சி அலுவலகங்களில் ஒப்புதல் வழங்கப்படும். 40 ஆயிரம் சதுரடி வரையிலான கட்டுமான அனுமதிகள் மாவட்ட அலுவலகத்திலேயே வழங்கப்படும். அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது தான், சிங்கிள் விண்டோஸ் சிஸ்டம். கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் அதை நடைமுறைப்படுத்தவில்லை’ என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினர்.
தொடர்ந்து பேசிய அவர், 'அடுக்கு மாடிக் கட்டடங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சர் கையெழுத்திட தேவையில்லை. நேரடியாக சிஎம்டிஏ அலுவலகத்தில் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்கி உள்ளோம். புதிதாக பெருநகர வளர்ச்சி குழுமம் கோயம்புத்தூர், திருச்சி, சேலம், ஓசூரில் அமைக்க உள்ளோம். டிடிபிசி பணியிடங்கள் 32%. அதவாது 250 இடங்கள் காலியாக உள்ளது. சிஎம்டிஏ-வில் 37 விழுக்காடு காலிப்பணியிடங்கள் உள்ளது. இதனால் அதிக பணிச்சுமை உள்ளது’ எனக் கூறினார்.
’மேலும், சிஎம்டிஏவில் போஸ்ட் திடீரென்று உருவாகியுள்ளது என அண்ணாமலை கூறியுள்ளார். ஆனால், அது 1978ஆம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. 46 ஐஏஎஸ் அலுவலர்கள் தற்போது வரை இந்தப் பதவியில் இருந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்தப் பதவியில் யாரும் இல்லை.
அண்ணாமலை புகார் எழுப்பியுள்ள கோவை விவகாரத்தில், சிவமாணிக்கம் என்பவர் 12.12.2019இல் விண்ணப்பித்துள்ளார். 21.08.2021ஆம் ஆண்டு அனுமதி கிடைத்துள்ளது. சிவமாணிக்கத்திடம் ஜி ஸ்கொயர் வாங்கியிருக்காலாம். இதற்கான அனுமதி கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டது’என்று தெரிவித்தார்.
’திமுக ஆட்சியில் மிக விரைவாக அனுமதி அளித்ததுபோல அண்ணாமலை கூறுகிறார். அனுமதி அளிக்கப்பட்டபோது யாரோட ஆட்சி என்பதை கவனிக்க வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றி அனுமதி அளிக்க கால அவகாசம் தேவைப்படும். சிஎம்டிஏவில் அண்ணாமலையையே அமர வைத்தாலும் எட்டு நாளில் அனுமதி கிடைக்காது.
எந்த நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கிறோம் என்பது முக்கியமல்ல. சட்டப்படி விதிகளைப் பின்பற்றி அளித்துள்ளோமா என்பதைத் தான் கவனிக்க வேண்டும். திருவாரூரில் கலைஞர் அருங்காட்சியத்திற்கு கட்சி சார்பில் அனுமதி கேட்டபோது விதிகளை பூர்த்தி செய்த பின்னர் தான் அனுமதி அளிக்கப்பட்டது.
சிஎம்டிஏவில் முழுமையாக ஒற்றைச்சாளர முறை நடைமுறைக்கு வந்துவிட்டால், அதிகபட்சமாக 2 மாதத்திற்குள் திட்டங்கள் அனுமதி அளிக்கப்படும். 37% காலிப்பணியிடங்கள் இருக்கும்போதும் பணிகள் துரிதமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. அண்ணாமலை ஏதாவது லேஅவுட் போட்டிருக்கிறாரா? அவருக்கு ஏதேனும் அனுமதி தேவைப்படுகிறதா? உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படும். ஜி ஸ்கொயர் தவிர மற்ற நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பது தவறான குற்றச்சாட்டு.
நீண்ட காலமாக அனுமதி கிடைக்காத நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க சிறப்பு முகாம் கூட நடத்த தயார்.