சென்னை: தமிழகத்தில் கடந்த இரு வாரங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் தேசியப் பாதுகாப்பு முகமை ஆகியவை அடுத்தடுத்து பல்வேறு பகுதிகளில் சோதனைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று (செப் 26) தமிழகத்தில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களின் வருவாயை மறைத்து சட்ட விரோதமாக பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக சென்னையில் தியாகராய நகர், சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது தமிழக அரசியல் மற்றும் தொழிலதிபர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
வருமான வரித்துறை: தூத்துக்குடி அனல் மின் நிலையம், தமிழக மின்சார வாரியத்திற்கு பொருள்களை சப்ளை செய்யக் கூடிய முக்கிய நிறுவனங்கள், மேட்டூர் அனல் மின் நிலையங்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தியபோது கிடைக்கப் பெற்ற முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் வருமான வரித்துறையானது சோதனை நடத்தியது. இவ்வாறு நடத்தப் பெற்ற சோதனையில், மேலும் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியது.
அமலாக்கத்துறை: கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் 8 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதில் மொத்தம் கணக்கில் வராத 15 கோடி ரூபாய் மற்றும் பல கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றியபோது அரசு ஊழியர்கள் சட்ட விரோத பணப் பரிமாற்ற செயல்களில் ஈடுபட்டனரா என 34 இடங்களில் அரசு ஊழியர்கள் வீட்டில் சோதனை நடத்தினர் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்.ஐ.ஏ சோதனை: கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோயம்புத்தூரில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் இறந்த மற்றும் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்ததாக கோவையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று கேரளாவில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினர் 300 பேர் குவிக்கப்பட்டு பாதுகாப்புடன் 12 இடங்களில் சோதனையானது நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ED Raid : தமிழ்நாட்டில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை! ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் வீட்டில் சோதனை எனத் தகவல்!