இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் புதிதாக ரிசாட் - 2பி எனப்படும் செயற்கைக்கோளை மே 22ஆம் தேதி காலை 5:27 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய முதலாவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்த ரிசாட் - 2பி செயற்கைக்கோள் 555 கி.மீ தொலைவில் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஆராய்ச்சிக்காக பயன்படுத்தபட உள்ளது. ரேடார் மூலம் பூமியை கண்காணிக்கும் இந்த செயற்கைக்கோள் எல்லை பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த செயற்கைக்கோளை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி - சி 46 ராக்கெட்டில் உந்து மோட்டார்கள் பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்எல்வி - சி 45 ராக்கெட் விண்ணில் பாய்வதை பொதுமக்கள் காண்பதற்கு பார்வையாளர் மாட (கேலரி) வசதி செய்து தரபட்டிருந்தது. அதேபோல், இம்முறையும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவுகள் ஐந்து நாட்களுக்கு முன்பாகத் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.