மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் கலவரம் மூண்டது. அதில் 53 பேர் உயிரிழந்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், மாநில அரசு இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
சென்னை
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், மாநில அரசு இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கொரட்டூரில் முக்கியச் சாலைகளில் பேரணி நடைபெற்றது.
பேரணியில் சுமார் இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டனர். இறுதியில் பாடி மேம்பாலம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ராமகிருஷ்ணன் அளித்த பேட்டியில் ”பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கலவரத்தை தூண்டும் அளவிற்குப் பேசிவருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
தவத்திரு அடிகளார் அளித்த பேட்டியில், 'தமிழ்நாடு அனைத்து மதத்தினரும் ஒற்றுமையை வலியுறுத்தும் மாநிலம். இங்கே பிரிவினை என்பது இல்லை' என்று தெரிவித்தார்.
சேலம்
சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே டெல்லியில் நடந்த கலவரத்தைத் தடுக்கத் தவறிய காவல் துறையினரைக் கண்டித்தும், கலவரத்தைத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டத்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓமலூர் வட்டார ஐக்கிய ஜமாத், ஓமலூர் வட்டார ஜமாத்துல் உலமா சபை, அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பி போராட்டத்தை நடத்தி தங்களது எதிர்ப்பை இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுடன் அரசியல் கட்சியினரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
தேனி
தேனி மாவட்டத்தில் போடி, பெரியகுளம், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் போடியில் உள்ள இஸ்லாமிய அமைப்பினர் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆயிரத்து 100 அடி நீளமுடைய இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு ஊர்வலம் நடத்தினர்.
போடி அரண்மனைப் பகுதியில் தொடங்கிய இந்த ஊர்வலமானது நகர் காவல் நிலையம் வழியாகப் பேருந்து நிலையம் அருகிலுள்ள தேவர் சிலை ரவுண்டானாவைச் சென்றடைந்து மீண்டும் கட்டபொம்மன் சிலை பகுதியில் நிறைவடைந்தது.
இதில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிராகச் சட்டம் நிறைவேற்றிய மத்திய அரசைக் கண்டித்தும், ஆதரவாக வாக்களித்த மாநில அரசைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: 'சி.ஏ.ஏ.வுக்கு எதிராகப் போராட பெண்களைப் கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை!'