பெருநகர சென்னை மாநகராட்சி கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தொடர்ந்து பலரிடமும் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையை பொறுத்தவரை ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகும் பட்சத்தில் அப்பகுதியே தொற்று உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் அதிகரித்திருக்கும் நோய் தொற்றை தொடர்ந்து ஒட்டுமொத்த கோயம்பேடு சந்தையையும் இடமாற்றம் செய்யும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் செய்து வருகிறது.
தற்போது ஒரே இடத்தில் அதிகரித்துள்ள தொற்றால் கோயம்பேடு சந்தை தற்போதைய கரோனா வைரஸ் தொற்று மையமாக மாறியுள்ளது. எனவே சந்தையை இடமாற்றம் செய்வதா, அல்லது மூன்றாகப் பிரித்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாற்றம் செய்வதா என்பது குறித்து சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் கார்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் மாநகராட்சி ஆணையர், காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.