சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ், இந்திய மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வினை இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் சேர்த்து 499 மையங்களில் 20 லட்சத்து 87 ஆயிரத்து 449 மாணவர்கள் எழுதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரையில் தேர்வு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் இருந்து அரசுப் பள்ளிகளில் படித்து 15 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர். 2022ஆம் ஆண்டில் தமிழ் வழியில் மட்டும் 31ஆயிரத்து 965 பேர் தேர்வு எழுத பதிவு செய்தனர். இதனால், கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாணவர்களிடம் நீட் தேர்வு எழுதும் ஆர்வம் குறைந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்தியாவில் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி , அகில இந்திய ஒதுக்கீட்டில் கால்நடை மருத்துவப் படிப்பு இடங்களுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, அந்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தி வருகிறது. 2023-24-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 449 நகரங்களில் மதியம் 2 மணிமுதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடக்கிறது.
இத்தேர்வுக்கு 11 லட்சத்து 84 லட்சம் மாணவிகள், 9 லட்சத்து 3 ஆயிரம் மாணவர்கள், 13 திருநங்கைகள் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் 95,823 மாணவிகளும், 51,757 மாணவர்களும் ஒரு திருநங்கை என மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரம் பேர். அரசுப் பள்ளிகளில் 2022ம் ஆண்டில் தமிழ் வழியில் மட்டும் 31 ஆயிரத்து 965 பேர் பதிவு செய்தனர்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 28 மையங்களில் 22ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் 720 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகியப் பாடங்களில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொருப் பாடத்திலும் 35 கேள்விகளுக்கு கட்டாயமாகவும், 15 கேள்விகளில் 10 கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும்.
மாணவர்கள் தவறாக விடை அளித்தால் மதிப்பெண் குறைக்கப்படும். தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்கள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பிறகு வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும்.
செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைக் கொண்டுவர அனுமதி இல்லை. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி அணியக் கூடாது.இதுபோன்ற கட்டுப்பாடுகள், இதர வழிமுறைகளை மாணவர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்காக உயர் கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டுதல் குழு
இதையும் படிங்க: மதுரை கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம்!