சென்னை: தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக கொடியை பயன்படுத்தியதற்காக சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றம் சென்றாலோ மாற்று கட்சிக்கு சென்றாலோ அதிமுக சட்ட விதிகளின்படி தானாகவே அடிப்படை உறுப்பினர் பதவி போய்டும்.
மன்னிப்பு கடிதம் அளித்தால் அதிமுக வில் டி.டி.வி. தினகரனை சேர்த்துக்கொள்வோம் என்பது கே.பி முனுசாமியின் தனிப்பட்ட கருத்து. அதிமுக அறிக்கையின் மூலம் வெளியாகும் தகவலே உண்மையான கருத்து. இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைக்கும் தினகரன் எப்படி அதிமுக அனுதாபியாக இருக்க முடியும்? என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் உரையில் இடம்பெற்றிருக்கிறதா என்பது குறித்து தனக்கு தெரியாது. அவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. நளினியை தவிர வேறு யாரையும் விடுதலை செய்ய கூடாது எனக் கூறிய திமுக, இன்று இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது.
மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு அரசு விதித்துள்ள மதிப்பு கூட்டு வரி மிகவும் குறைவு. செஸ் வரி உயர்ந்தாலும் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.