கடந்த ஆகஸ்ட் மாதம், ஈராக் நாட்டின் பாக்தாத்தில் உள்ள அல்-குவந்த் காவல் நிலையத்திலிருந்து 12 குற்றவாளிகள் தப்பித்தனர். அதில், அதிமுக்கிய குற்றவாளிகள் இரண்டு பேர் தென்னிந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச காவல் துறை, இந்திய உளவுத் துறைக்கு எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து, தென்னிந்திய உளவுத் துறை தரப்பிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும் காவல் ஆணையர்களுக்கும் ஈராக் நாட்டிலிருந்து தப்பிவந்த இரண்டு குற்றவாளிகளின் புகைப்படங்கள் உள்பட அவர்களின் முழுத் தகவல்களும் கொடுக்கப்பட்டு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
ஈராக்கிலிருந்து தப்பி தென்னிந்தியாவில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளின் பெயர்கள்:
- அல் லம்மி குஹாதான்,
- அல்ஷாவய்லி சதீக்
இவர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்ததாகவும் உளவுத் துறையினர் கூறியுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு காவல் துறையினர், "ஈராக் நாட்டு குற்றவாளிகளால் தமிழ்நாட்டில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.