உலகத்தையே அச்சுறுத்திவரும் கோவிட்-19 வைரஸ் இந்தியாவிலும் பரவி, உயிர்பலி ஏற்படுத்தியுள்ளதால், முக்கிய வழக்குகளை மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதேபோல பிற மாநில உயர் நீதிமன்றங்களும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுப்பையா, சத்யநாராயணன், கிருபாகரன், சுந்தரேஷ், சிவஞானம், தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன், சி.ஐ.எஸ்.எப் சீனியர் கமாண்டர் கே.வி.கே. ஶ்ரீராம், உயர்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு தமிழ்நாடு காவல்துறை துணை ஆணையர் சுந்தர வடிவேலு ஆகியோருடன் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 20 நிமிடங்கள் நடைபெற்றது. கூட்டத்தில், நாளைமுதல் சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதி மன்ற மதுரை கிளை ஆகியவற்றில் அவசர வழக்குகள், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்குள் வரும் வழக்கறிஞர்கள், மனுதாரர்கள், ஊழியர்கள் வெப்ப திரையிடல் மூலமாக பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பை தலைமை பதிவாளர் அறிவித்தார்.
அதில், ”வழக்கறிஞர்களைத் தவிர மனுதாரர் உள்பட வேறு யாருக்கும் நீதிமன்ற வளாகத்திற்குள் வர அனுமதி கிடையாது. நீதிமன்றத்துக்குள் வரும் அனைவரும் தெர்மல் ஸ்கீரினிங் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள். மாலை 5 மணிக்குப் பிறகு சுகாதாரப் பணிக்காக அலுவலர்கள் நீதிமன்றத்திலிருந்து வெளியேற வேண்டும். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் அனைத்துக் கூட்டங்கள் மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. நீதிமன்ற வளாகத்திலுள்ள உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. நீதிமன்றத்தின் மறு உத்தரவு வந்த பிறகு அவை வழக்கம்போல செயல்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லிப்ட் மூலம் கொரோனா தொற்றா...? வாய்ப்பே இல்லை - ஜான்சன் நிறுவன மேலாளர்