சென்னை: கூடுவாஞ்சேரி அருகே 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி சோட்டா வினோத்தின் தாயார் மற்றும் சகோதரரிடம் தாம்பரம் கோட்டாச்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சோட்டா வினோத் மற்றும் ரமேஷ். பிரபல ரவுடிகளான இவர்கள் மீது கொலை, கொள்ளை, ரியல் எஸ்டேட் அதிபர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் எனப் பலரிடம் மிரட்டி பணம் பறித்தல் உட்பட பல்வேறு வழக்குகள் இருந்தன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி அருகே காரணை புதுச்சேரி வனப்பகுதியில் வாகன சோதனையில் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் ஈடுபட்டபோது காரில் வந்த சோட்டா வினோத், ரமேஷ் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டபோது என்கவுன்ட்டரில் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: 'அதிமுகவை விமர்சித்தால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும்' - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!
இந்தச் சம்பவம் தொடர்பாக வாகனச் சோதனையின்போது, என்கவுன்ட்டர் நடைபெற்றதால் தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோட்டாட்சியர் செல்வகுமார் விசாரணை தொடங்கினார். சுட்டுக் கொல்லப்பட்ட இருவரின் உடல்களும் உடற்கூராய்விற்குப் பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் என்கவுன்ட்டர் தொடர்பாக விசாரணை தொடங்கியது. என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரமேஷ் குடும்பத்தினர் 5வது நாள் காரியத்திற்குப் பின்னர் விசாரணைக்கு வருவதாகக் கூறி இன்றைய விசாரணைக்கு வரவில்லை. என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி சோட்டா வினோத் சார்பில் அவருடைய தாயார் மற்றும் சகோதரர் விசாரணைக்கு ஆஜராகினர்.
சோட்டா வினோத் இறந்தது தொடர்பாக எப்.ஐ.ஆர்(FIR) ஏதும் இதுவரை தரப்படவில்லை என்றும்; மேலும், தங்களுக்கு அவரின் உடற்கூராய்வு அறிக்கையும் தரவில்லை எனக் கூறிய சோட்டா வினோத் உறவினர்கள் போலீசார் தங்களை பொய் வழக்குப் போட்டு கைது செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் எனவும்; கோட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கருத்துகளை தாம்பரம் கோட்டாட்சியர் பதிவு செய்து கொண்டு, தொடர்ந்து விசாரணை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயிலில் ரகசிய வழிபாடு நடத்திய அமைச்சர் சக்கரபாணி - காரணம் என்ன?