சென்னை: அண்மையில் உகாண்டா நாட்டில் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டி - 2021 நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து எட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
பல்வேறு பிரிவுகளின்கீழ் நடைபெற்ற போட்டியில், இந்திய வீரர்கள் 45 பதக்கங்களைப் பெற்றனர். அதில் தமிழ்நாடு வீரர்கள் 12 பதக்கங்களை வென்று அசத்தினர். இந்நிலையில் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் நேற்று (நவம்பர் 23) சென்னை திரும்பினர்.
அவர்களுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு நலத் துறை சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு செய்தியாளரைச் சந்தித்த வீரர்கள் பேசுகையில், “உகாண்டா நாட்டில் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகே மிகப்பெரிய குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
அந்தத் தகவல் அறிந்த உடனே தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் எங்களைத் தொடர்புகொண்டு பேசினார். மேலும் தினசரி எங்களின் நிலையைக் கேட்டறிந்த தமிழ்நாடு அரசு, வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்தது. அத்துடன் குண்டுவெடிப்பு காரணமாக எங்களுக்கு ராணுவப் பாதுகாப்பு அளித்தனர். பயிற்சியில் விடாமுயற்சியோடு செயல்பட்டதால் பதக்கங்கள் வசமாகின” என்றனர்.
இதையும் படிங்க: Theni Flood: ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் - உயிருடன் மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள்