சென்னை: மலேசியா நாட்டில் 18ஆவது சர்வதேச கராத்தே போட்டி கடந்த மே 27,28,29 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் தமிழகத்திலிருந்து கராத்தே மாஸ்டர் கேபிராஜ் தலைமையில் கலந்து கொண்ட ஐந்து மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளனர்.
பதக்கம் வென்ற மாணவி கீர்த்திகா கூறும் போது, "நான் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகிறேன். கராத்தே கற்றுக் கொள்ள வேண்டும் என ஆசையாக இருந்தது. அம்மா, அப்பாவிடம் கூறி கராத்தே கற்றுக் கொண்டேன். சர்வதேச போட்டியில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
மாணவி பிரிதிஷா கூறுகையில், ’’இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறேன். 2017ஆம் ஆண்டில் இருந்து கராத்தே கற்று வருகிறேன். இந்தப் போட்டியில் சீனியர் பெண்கள் பிரிவில் கலந்து கொண்டு தங்கம், வெண்கலம் பதக்கம் வெற்றி பெற்றுள்ளேன்’’ என்றார்.
மாணவி அமல்யா கூறும்போது, "3 வயது முதல் கராத்தே கற்றுக் கொள்கிறேன். பெண்கள் கராத்தே கற்றுக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு பாதுகாப்பாக அமையும். நான் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம், வெண்கலப் பதக்கம் வெற்றி பெற்றுள்ளேன்" என்றார்.
புதோகே கராத்தே பள்ளி ஆசிரியர் கேபிராஜ் கூறும்பொழுது, ’’மலேசியாவில் நடைபெற்ற போட்டி மிக பிரமாண்டமாகவும், சர்வதேச தரத்துடன் நேர்மையாக நடைபெற்றது’’ என்று கூறினார்.
இதையும் படிங்க: 'விளையாட்டு விடுதி மேலாளர் கொடுமைப்படுத்துகிறார்..!' - மாணவிகள் புகார்