நாடு முழுவதற்கும் பொருந்தக் கூடிய அல்லது இரு மாநிலங்களுக்கு இடையிலான சுற்றுச்சூழல் விவகாரங்கள் தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகளை (suo motu) டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் பட்டியலிட வேண்டும் என, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கடந்த ஜூன் 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி செல்வராஜ்குமார் என்பவர் மீனவர் நலச்சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது.
டெல்லிக்கு அலையும் சூழல்
அந்த மனுவில், 'சுற்றுச்சூழல் தொடர்பான குறைகளுக்கு மக்கள் நிவாரணம் பெறுவதற்காக நாடு முழுவதும் ஐந்து அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, தென் மாநில மக்கள் நீதி பெறுவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு காரணமாக குடிமக்கள், டெல்லிக்குப் பயணப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டங்களுக்கு விரோதமானது என்பதால், இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்' எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அமர்வுகள் எங்கு அமைய வேண்டும், அதன் அதிகார வரம்புக்கு உட்பட்ட மாநிலங்கள் எவை எனக் குறிப்பிட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அறிவிப்பாணை இல்லாமல், பிற அமர்வுகளில் உள்ள வழக்குகளை, முதன்மை அமர்வு விசாரணைக்கு எடுக்க முடியாது எனக் கூறி, அதன் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்தது.
மேலும், மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஐந்து வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கு: இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!