சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை இருந்தவர் தளி ராமச்சந்திரன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலையில் உள்ளன. இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த நாகராஜன் ரெட்டி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில் தளி ராமச்சந்திரன், தன்னை கொலை முயற்சி செய்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் தனக்கு மீண்டும் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும் அந்த மிரட்டல் கடிதத்தில் தொடர்ந்து வழக்கை நடத்தினால் கொலை செய்து விடுவோம் என்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், வழக்கு விசாரணையை சேலம் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தி வெங்கடேஷ், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கை சேலம் மாவட்டத்திற்கு மாற்றுவது குறித்து தளி காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஸ்டாலினைப் போலல்லாமல் மக்களோடு மக்களாகப் பணியாற்றுபவர் முதலமைச்சர் பழனிசாமி'