காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர் ஜெகத்ரட்சகன். தற்போது அரக்கோணம் மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை சட்டத்துக்கு உட்பட்டு முறையாக வாங்கியுள்ளேன்.
இருப்பினும், அந்த நிறுவனத்தில் தனக்கு உரிமை உள்ளது என்று குவிட்டன்தாசன் என்பவர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2013 ஆம் ஆண்டு காவல்துறை விசாரணை நடத்தினர். பின்னர், அது முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில், அதே புகார் தொடர்பாக சிபிசிஐடி மீண்டும் வழக்கு பதிவு செய்து அந்த வழக்கை விசாரித்து வருகிறது.
அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிய மனு இன்று நீதிபதி சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் உன் நோக்கத்தோடு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், ஆகஸ்ட் 24ஆம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருப்பதாகவும் இது குறித்து சிபிசிஐடி பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 31ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுவரை இந்த வழக்கு தொடர்பாக ஜெகத்ரட்சகன் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதே புகார் தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை அளித்த சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.