சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு நன்கொடை செய்ய விரும்புவோர், இணையவழி பதிவு செய்து உதவலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருக்கோயில்களின் திருப்பணிக்குத் தேவையான நிதியுதவி அல்லது பொருளுதவி வழங்குவதற்கு பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முன்வருகின்றனர். அவர்களின் உள்ளக்கிடக்கையினை செயல்படுத்தும் விதமாகவும் நன்கொடை செலுத்தும் வழிமுறைகளை எளிமைப்படுத்தும் விதமாகவும், இந்து சமய அறநிலையத் துறையின் வலைதளம் (www.hrce.tn.gov.in) வாயிலாக நன்கொடையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
நன்கொடை செலுத்த பதிவு செய்ய விரும்புவோர் இந்து சமய அறநிலையத் துறையின் வலைதளத்திற்குச் சென்று 'நன்கொடையாளர் பதிவு' என்ற தலைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் தங்களுக்கு விருப்பமான திருக்கோயிலினை தேர்வு செய்ய வேண்டும். தங்களது பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
நன்கொடையாளரின் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு ஒப்புகைத் தகவல் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும். நன்கொடையாளர் உள்ளீடு செய்த தகவல்கள் தொடர்புடைய திருக்கோயில் நிர்வாகத்திற்கு இணையவழி அனுப்பப்பட்டு சம்பந்தப்பட்ட திருக்கோயிலின் நிர்வாக அதிகாரி நன்கொடையாளரை தொடர்புகொள்வார்.
நன்கொடையாளர் நேரடியாக இணைய வழியிலேயே நிதியுதவியளித்து அதற்கான ரசீதினை மின்னஞ்சல் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். இணையவழி செலுத்துவதில் சிரமங்கள் இருப்பின் நன்கொடையாளர் சம்பந்தப்பட்ட திருக்கோயிலுக்கு நேரில் சென்று மின்னஞ்சல் முகவரி வழியாக பெறப்பட்ட ஒப்புகை அட்டையை காண்பித்து ரொக்கமாக திருக்கோயில் நிர்வாகியிடம் செலுத்தி அதற்காக ரசீதினை பெற்றுக்கொள்ளலாம்.
பொருளுதவி செய்வதற்கு பதிவு செய்த நன்கொடையாளர்கள் சம்பந்தப்பட்ட திருக்கோயில் நிர்வாகியுடன் தொடர்பில் இருந்து தக்க சமயத்தில் அவர்கள் வழங்க விரும்பும் பொருளுதவியை மேற்கொள்ளலாம். நன்கொடையாளர்களுக்கு ஏதேனும் சிரமங்கள் இருப்பின், இந்து சமய அறநிலையத் துறை ஆணையரது நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் உதவி மையத்தை 044-28339999 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அனைத்து நாள்களிலும் கோயில்கள் திறக்க வலியுறுத்தி போராட்டம் - அண்ணாமலை அறிவிப்பு