சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்ப்பதன நிலையத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தேர்தலில் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கும், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடிக்குத் தேவையான முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி உள்ளிட்ட பல பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் மாவட்டத் தேர்தல் அலுவலருடன் இணைந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தலில் வாக்களிக்க வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியும் தூய்மைப்படுத்தப்படுகிறது. வாக்களிக்க வரும் அனைவரும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து வாக்களிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் படிப்படியாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது தேர்தல் நடைபெற்று வருவதால் தீவிரமாக களப்பணிகள் நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் ஏழாம் தேதிக்கு மேல் முகாம்கள் தீவிரமாக முழுவீச்சில் நடைபெறும். களப்பணியாளர்கள் அதிக அளவில் ஈடுப்படுத்தப்பட்டு, கண்காணிப்புக் குழுக்கள் முழு வீச்சில் செயல்படுத்தப்படும்.
சென்னையில் கரோனா தாெற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கிண்டி கரோனா சிறப்பு மருத்துவமனைக்கு மட்டுமே செல்கின்றனர். மற்ற மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 4,365 படுக்கைகள் உள்ளன. இதில் 1,269 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரோனா தொற்று சிகிச்சை மையங்களும் செயல்படத் தொடங்கியுள்ளன.
ஏழாம் தேதிக்கு பின்னர் தமிழ்நாட்டில் லேசான கரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கரோனா தொற்றுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மட்டுமே மேற்காெள்ளப்படுகிறது. பரிசோதனைகளில் எவ்வித குறைபாடுகள் இல்லாமல் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு 54 லட்சம் கரோனா தடுப்பூசி வந்துள்ளது. ஆனால் மக்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. மத்திய அரசு மூன்று நாள்களில் அதிக அளவில் தடுப்பூசி பயன்படுத்தும் மாநிலங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 4,000 மையங்களில் 15,000 பேர் மட்டுமே நேற்று (ஏப்.04) தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். எனவே ஏழாம் தேதிக்கு பிறகு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அதிக அளவில் போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கரோனா தொற்று அதிகரித்து வருவதால், தேவையற்ற பணிகளில் படிப்படியாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம். இது அரசின் கொள்கை முடிவாகும். தமிழ்நாட்டில் தற்போது 925 இடங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன. தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்ட கூட்டங்கள் சற்று சவாலாக இருந்தன. பொது மக்கள் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தவர்கள் அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்திக்கொண்டு , உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.
இறப்பு, திருமணம், சமுதாய நிகழ்ச்சி போன்றவற்றில் அதிக அளவில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் தேவையற்ற வெளியூர் பயணங்களையும் தவிர்க்க வேண்டும். பள்ளிகளை மூடிய பின்னர் பயிற்சி நிறுவனங்களை நடத்துகின்றனர். இதனால் அங்கிருந்தும் கரோனா தொற்று பரவுகிறது.
தடுப்பூசியை மக்கள் அலட்சியப்படுத்துவது வருத்தமளிக்கிறது. பெரும்பாலும் ஒரு தடுப்பூசி மையத்தில் 100 பேருக்கு தடுப்பூசி போடும் இடத்தில் சராசரியாக 25 முதல் 30 பேர் மட்டுமே செலுத்திக் கொள்கின்றனர். தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் பாதிப்பு 5 விழுக்காட்டிற்கு மேல் உள்ளது. திருப்பத்தூர் தவிர பிற மாவட்டங்களில் கரோனா தொற்று இரண்டு விழுக்காட்டுக்கு மேல் உள்ளது” என்றார்.