சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கு 7 ஆயிரத்து 612 மாணவர்களுக்கும், தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கு ஆயிரத்து 475 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என மருத்துக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சாந்தி மலர், அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், "7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவர்களிடம் எந்த ஒரு கட்டணங்களும் வசூலிக்க கூடாது.
கல்வி கட்டணம், நூலக கட்டணம், சிறப்பு கட்டணம், விடுதி கட்டணம், உணவு கட்டணம் என எந்த ஒரு கட்டணங்களையும் வசூலிக்க கூடாது. அவர்களுக்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது. எனவே இந்த மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார்கள் ஏதேனும் வந்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்தப்பட உள்ளதால், அதற்கான பதிவையும் மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார். 2023 – 2024 ஆம் ஆண்டின் இளநிலை மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவப் கல்லூரிகளில்
உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் கடந்த மாதம் ஜூன் 28 ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரையில் 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. 2023-24 ஆம் ஆண்டிற்கான அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் படிப்பில் 6 ஆயிரத்து 326 இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் பி.டி.எஸ் படிப்பில் ஆயிரத்து 768 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.
மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் உள்ள இடங்களில் சேர்வதற்கு ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையில் தரவரிசை எண் 1 முதல் 25 ஆயிரத்தி 856 வரையிலும், நீட் தேர்வு மதிப்பெண் 720 முதல் 107 மதிப்பெண் வரை பெற்ற மாணவர்கள் விரும்பும் கல்லூரியை பதிவு செய்தனர்.
அதேபோல் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் உள்ள இடங்களில் சேருவதற்கு ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான தரவரிசை எண் 1 முதல் 13 ஆயிரத்து 179 வரையிலும், நீட் தேர்வு மதிப்பெண் 720 முதல் 107 மதிப்பெண் வரை பெற்றவர்கள் பதிவு செய்தனர்.
இவர்களுக்கான இடங்கள் ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 6ஆம் தேதி கல்லூரியின் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் அரசு ஒதுக்கீட்டில் 7 ஆயிரத்து 612 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் ஆயிரத்து 475 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. முதல் சுற்று கலந்தாய்வில் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 107 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் அதிகளவில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தங்களுக்கான கல்லூரியை தேர்வு செய்து சேர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இது குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறும்போது, "தமிழ்நாடு மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழு முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீட்டு இடங்களை வெளியிட்டுள்ளனர்.
அதில் 7ஆயிரத்து 612 பேருக்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடத்தில் இடங்களை அளித்துள்ளனர். அதிகப்படியாக 715 மதிப்பெண் பெற்று தரவரிசைப் பட்டியலில் 3 வது இடம் பெற்ற மாணவி சென்னை மருத்துக்கல்லூரியை தேர்வு செய்துள்ளார். ஆனால் 720 மதிப்பெண்களுக்கு வெறும் 107 மதிப்பெண் பெற்ற மாணவி பி.டி.எஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடத்தில் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார்.
மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான கட்ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளது. இதர வகுப்பினருக்கு 606 மதிப்பெண்கள் நிர்ணியக்கப் பட்டதையடுத்து, இது கடந்தாண்டை விட 25 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 559 மதிப்பெண்கள் என கடந்தாண்டை விட 30 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லீம் பிரிவினருக்கு 542 மதிப்பெண்கள் என கடந்தாண்டை விட 38 மதிப்பெண்களும்,
மேலும் எம்பிசி வகுப்பினருக்கு 532 மதிப்பெண்கள் என கடந்தாண்டை விட 36 மதிப்பெண்களும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 452 மதிப்பெண்கள் என கடந்தாண்டைவிட 45 மதிப்பெண்களும், ஆதிதிராவிடர் அருந்ததியர் பிரிவில் 383 மதிப்பெண்கள் என கடந்தாண்டை காட்டிலும் 28 மதிப்பெண்களும், பழங்குடியினர் பிரிவினருக்கு 355 மதிப்பெண்கள் என கடந்தாண்டை விட 44 மதிப்பெண்களும் அதிகமாகி உள்ளது.
தனியார் பல்கலைக்கழகத்திலும் அதிகளவில் மதிப்பெண் பெற்றவர்களுக்கு தான் இடம் கிடைத்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் 720 மதிப்பெண்களுக்கு 107 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பிடிஎஸ் படிப்பில் இடம் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "சென்னை பல்கலை. வளர்ச்சி, மேம்பாட்டுக்கு நிதி ஆதார பெருக்காக தமிழ்நாடு அரசு இருக்கும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!