தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணியில் இருந்தபோது துரதிருஷ்டவசமாக உயிரிழக்கும் அரசு மருத்துவர்களுக்கு "குடும்ப நல நிதி வழங்கும் திட்டத்தை" தொடங்கியுள்ள தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மரணமடைந்தால், அவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதி கிடைக்கும். இதை ஒரு கோடியாக ரூபாயாக உயர்த்த வேண்டும். இந்தத் திட்டத்திற்கான நிதி, அரசுப் பணியில் இருக்கும் 18 ஆயிரம் அரசு மருத்துவர்களின் ஊதியத்திலிருந்து தான் பிடித்தம் செய்யப்படுகிறது. இதில், அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை.
எனவே, அரசு தனது பங்களிப்பாக இத்திட்டத்திற்கான நிதியில் 50 விழுக்காட்டை ஏற்க வேண்டும். இதுபோன்ற திட்டத்தை அரசுத் துறையில் இல்லாமல், தனியாகத் தொழில் செய்யும், தனியார் மருத்துவர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான நான்கு அம்ச கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.
வேலை நிறுத்தம் செய்ததற்காக ,அரசு மருத்துவர்களுக்குத் தண்டனையாக வழங்கப்பட்டுள்ள இடமாறுதல் உத்தரவுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 17 பி மெமோக்களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 'கல்வி வணிகம் அல்ல, கட்டணத்தை தள்ளுபடி செய்க'- உச்ச நீதிமன்றத்தில் மனு!