சென்னை: மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று (ஜூன் 6) இரவு 7.20 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 68 பயணிகளுடன் புறப்பட தயாரானது. இந்த விமானம் தாமதமாக 7.57 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
சென்னை வந்த இந்த விமானம், இரவு 9 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக தாழப்பறந்தது. அதன்பின்பு வேகத்தை குறைத்து ஓடுபாதையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது விமானம் திடீரென ஓடுபாதையில் தரை இறங்காமல் மீண்டும் வானில் பறக்கத் தொடங்கியது.
அந்த நேரத்தில் விமானம் அளவுக்கு அதிகமாக குழுங்கியதால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பயந்து நடுங்கினர். விமானத்திற்கு என்ன ஆனது? ஏன் தரை இறங்க வந்த விமானம் தரை இறங்காமல் திடீரென வானில் பறக்கத் தொடங்கியது? என்று பயணிகள் பலர் விமான பணிப்பெண்களைக் கேட்டபோது, அவர்கள் யாரும் எதுவும் கூறவில்லை எனப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்பின்பு சுமார் 20 நிமிடங்கள் வானில் வட்டமிட்டு பறந்த பின்பு, இரவு 09:22 மணிக்கு விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பாக தரை இறங்கியது. விமானம் தரை இறங்கிய பின்னர், விமானத்தில் பிரச்னையா? இல்லையேல் ஓடுபாதையில் ஏதாவது பிரச்சனையா? என்பது பற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தரப்பில் கேட்டபோதும் எந்தவித சரியான பதிலும் தரப்படவில்லை.
மேலும், ‘ஆபரேஷன் ரீஷன்’ என்று மட்டுமே கூறியுள்ளனர். விமானங்கள் விமானநிலையத்தில் தரையிறங்கும்போதும் புறப்படும் போதும் திடீா் தாமதம் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை பயணிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது விமான பாதுகாப்பு சட்ட விதிகளில் உள்ளது. ஆனால், சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக பயணிகளுக்கு எதுவும் தெரியப்படுத்துவது கிடையாது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுப்பு; இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு!