சென்னையில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்தானதையடுத்து, சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். சென்னை - திருச்சி இடையே 4 விமானங்களும், திருச்சி- சென்னை இடையே 4 விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் இன்று (நவ. 20) ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து பயணிகளின் போக்குவரத்து சிரமத்தை முன்வைத்து, ரத்தான விமானங்களுக்கு ஈடுகட்டும் வகையில் இன்று (நவ.20) மாலை 3:30 மணியளவில் சென்னை- திருச்சிக்கும், மறுமார்க்கமாக திருச்சியில் இருந்து சென்னைக்கு மாலை 6 மணியளவில் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இருந்து தினமும் காலை 6:20, 9:25மணிக்கும், பகல் 12 :30 மணிக்கும், மாலை 6:40 மணி ஆகிய நேரங்களில் 4 விமானங்களும், அதைப்போல் திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 8:55 மணிக்கும், பகல் 12 மணிக்கும், மாலை 3 மணிக்கும் மற்றும் இரவு 9 மணி ஆகிய நேரங்களில் 4 விமானங்கள் வழக்கமாக இயங்கிவருகிறது.
இவ்வாறு ஒரு நாளைக்கு புறப்பாடு விமானங்கள் 4, வருகை விமானங்கள் 4 என மொத்தம் 8 விமானங்களை சென்னை- திருச்சி- சென்னை இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தினமும் இயக்கி வந்த நிலையில், இன்று(நவ.20) இந்த 8 விமானங்களும் திடீரென ரத்து செய்யப்படுவதாக நேற்று(நவ.19) இரவு, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்தது. அதோடு பயணிகளுக்கும் குறுஞ்செய்தி தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக, இன்று மாலை 3:30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கும், மாலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னைக்கும், சிறப்பு பெரிய ரக விமானத்தை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்குவதாகவும், விருப்பப்படும் பயணிகள் அவர்களின் பயண டிக்கெட்டுகளை, அந்த விமானங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.
இதனால் பயணிகள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். பயணிகள் சிலர் சிறப்பு விமானத்திற்கு அவர்களுடைய முன்பதிவு டிக்கெட்களை மாற்றியுள்ளனர். மற்றும் சிலர் மதுரை விமானங்களுக்கு டிக்கெட்டுகளை மாற்றியுள்ளனர். மேலும் சில பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு கார், ரயில்களில் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாக பயணிகள் சிலர் வேதனை தெரிவித்தனர். இதைப்போல் திருச்சி விமான நிலையத்திலும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "நிர்வாக காரணங்களுகாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்காக வருந்துகிறோம்” என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: எதிர்பாராத விதமாக ஆம்னி வேனில் கிளம்பிய புகை.. நொடியில் எலும்புக்கூடான வேன்…பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!