இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள கடிதத்தில், “கரோனா என்னும் பெருந்தொற்று நோயால் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், நமது தமிழ்நாடு அதில் சிக்கித் தவிப்பதை எண்ணி கனத்த இதயத்தோடு இக்கடிதத்தை எழுதுகிறேன்.
கரோனா சிகிச்சைப் பணியில் இருந்த மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத நிலையை ஏற்படுத்தியவர்கள்தான் இந்த ஆட்சியாளர்கள். விளைவு, பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 30 சுகாதாரப் பணியாளர்கள் இதுவரை கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருகிறார்கள்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை சொந்த உறவுகளே நெருங்கத் தயங்கும் நேரத்தில், அவர்களை நெருங்கி சிகிச்சையளிக்கும் உன்னதமான பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் மருத்துவர்கள். அவர்களில் ஒருவர் மரணமடைந்தபோது, அவரது உடலை தங்கள் பகுதியில் அடக்கம் செய்ய மக்கள் புரிதலின்றி எதிர்ப்பு தெரிவித்த உடனே, அரசு எச்சரிக்கை அடைந்து அதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யத் தவறியதால், அடுத்தடுத்து இரண்டு மருத்துவர்களின் இறுதி அடக்கமும் வேதனை தரும் வகையில் நடந்தேறியதை நாம் கண்டோம்.
குறிப்பாக, இந்த அரசின் உச்சபட்ச அலட்சியத்தால் மருத்துவர் சைமனின் உடல் அடக்கத்தின்போது நடந்த நிகழ்வுகள் அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி, அதன் காரணமாக இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அளவுக்குப் போனதையும் நாம் கண்டோம்.
மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு உடைகள் இல்லை என்ற கூக்குரல் கண்டுகொள்ளப்படாத நிலையில், அவர்கள் அணிய வேண்டிய பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்ததைக் கண்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. அரசியல் நடத்தாதீர்கள் என்று மற்ற கட்சிகளைப் பார்த்து சொல்கிறார்கள்.
இதற்கு சற்றும் சளைக்காமல் எதிர்க்கட்சி தரப்பில், எரிகிற வீட்டில் எதைப்பிடுங்கினால் ஆதாயம் என்று பார்ப்பது போல, ஊரடங்கின் காரணமாக அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் இந்த நேரத்தில், ‘ஒன்றிணைவோம் வா’ என்று சொல்லி அழைப்பு விடுக்கும் அபத்தத்தை என்னவென்று சொல்வது?
ஊரடங்கு அமலில் உள்ளபோது, அனைத்துக்கட்சி கூட்டம் போடுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறேன் என்று ஒரு தலைவரே நேரில் போவது இதெல்லாம் என்ன நாடகம்? மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசியல் கட்சித் தலைவர் செய்கிற வேலையா இவையெல்லாம்? திருமண வீட்டில் மணமகனாக இருக்க வேண்டும்; துக்க வீட்டில் பிணமாக இருக்க வேண்டும் என்பது இவர்களின் இயல்பாக இருக்கலாம். ஆனால் இந்தப் பேரிடர் காலத்திலாவது அந்த குணத்தை கொஞ்சம் தள்ளிவைக்கக் கூடாதா என்று மக்கள் மத்தியில் எழுகிற கேள்வியிலும் நியாயம் இல்லாமல் இல்லை.
இந்த அபத்தங்கள், அவலங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல், அமமுகவின் சார்பில் விடுக்கப்பட்ட என்னுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று, ஊரடங்கின் முதற்கட்டத்தில் மாநிலம் முழுக்க உங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை அமமுகவினர் செய்தீர்கள். இப்போதும் ஊரடங்கு தொடர்கிற சூழலில், உங்களின் உதவிகளும் தொடரட்டும். ஒவ்வொரு அமமுக தொண்டரும் குறைந்தது ஓர் ஏழை குடும்பத்தையாவது அடையாளம் கண்டு அவர்களும் இந்தத் துயரிலிருந்து மீண்டுவர கைகொடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : கரோனா பாதிப்பு - துப்புரவுப் பணியாளர்களுக்கு தலைமை கொறடா பாராட்டு