மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் மற்றும் கனரக தொழில்கள் துறையின் துணையுடன் நடத்தப்படும் எட்டாவது சர்வதேச பொறியியல் செயலாக்க கண்காட்சி சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மலேசியாவின் சர்வதேச வர்த்தக துறை அமைச்சகத்தின் முதன்மைத் துணைச்செயலாளர் டாத்துக் கே திலகவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்களும், அரசு பிரமுகர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய திலகவதி, "இந்தியா-மலேசியா நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் கடந்த 2017-18 ஆம் ஆண்டில் 14 .71 பில்லியன் அமெரிக்க டாலராக, இந்திய மதிப்பில் ரூ. 1022 கோடியாக இருந்தது. இது இந்தியாவிலிருந்து மலேசியாவின் ஏற்றுமதியாகும் செய்யப்படும் வர்த்தகம் 5.7 பில்லியன் அமெரிக்க டாலராகவும் ( ரூ. 397 கோடி), மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் வர்த்தகம் 9 பில்லியன் அமெரிக்க டாலராகவும் ( ரூ. 625 கோடி) உள்ளது" என்றார்.
இவரைத் தொடர்ந்து பேசிய இந்தியவிற்கான வர்த்தகத் துறை செயலாளர் அனுப் வத்வான், "இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் கால் பங்கு பொறியியல் துறை சார்ந்ததாக உள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் வர்த்தக வசதிகளுக்கான ஏராளமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாகவும் தடையில்லா ஒப்பந்தங்களில் கட்டணம் முன்னுரிமைகளை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் ஏற்றுமதியாளர்கள் தங்கள் செல்வாக்கினை உயர்த்திக் கொள்ள முடியும். இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 330 பில்லியன் டாலர்களை எட்ட இருக்கிறது" என்றார்.
இந்த கண்காட்சியில் தமிழகம் மற்றும் இந்திய உள்நாடு உற்பத்தியாளர்களின் பல்வேறு பொறியியல் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றினை சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு, விண்வெளி, உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல் துறைகளை சார்ந்த முன்னணி பொதுத்துறை விற்பனையாளர்கள், தொழிலதிபர்கள் தொழில்முனைவோர்கள் வைக்கப்பட்டிருந்த பொறியியல் பொருள்களை பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தனர்.
பொறியியல் வர்த்தக கண்காட்சியை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு அரங்குகளை பார்வையிட்டு விற்பனையாளர்களுடன் கலந்துரையாடினர்.